சென்னை: ஆனைமலை ஆறு – நல்லாறு திட்ட நீரை பெற கேரள அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டிருப்பாதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசும்போது, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்துக்கும், பாண்டியாரு – பொன்னம்பலம் ஆறு திட்டத்துக்கும் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. இப்போது அந்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இவ்விரு திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஏற்கெனவே பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தத்தில் ஆனைமலை ஆற்றிலும், நல்லாற்றிலும் தமிழக அரசு தண்ணீரை திருப்பிக் கொள்ளலாம். அவர்கள் கீழே ஒரு பெரிய அணை கட்டியுள்ளனர். அந்த அணை திட்டம் முடியும் வரை, தண்ணீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டாம் என்று கேரள அரசு கூறியிருந்தது.
ஆனால் அந்த அணையை கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 73 டிஎம்சி நீர் நிரம்பி வழிந்து செல்கிறது நியாயமாக நாம் தண்ணீரை திருப்பிக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கேரளா அரசுக்கு எத்தனையோ முறை அழைத்து இருக்கிறோம். கடிதங்கள் எழுதியிருக்கிறோம். ஆனாலும் கேரளா அரசு இதில் மெத்தனமாக உள்ளது. விரைவில் நேரில் சந்திக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.