சென்னை: கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த 2023-24ம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களைவிட 2 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதாவது, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 14.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தமிழகம் பதிவு செய்துள்ளது.
53 சதவீதம் வளர்ச்சி: நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவாக 41.23 சதவீதத்தை தமிழகம் அடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்னணு உற்பத்தியாளர்களுக்கும் வாழ்த்துகள். முந்தைய ஆண்டின் 9.56 பில்லியன் அமெரிக்க டாலரைவிட இந்த ஆண்டு 53 சதவீதம் வளர்ச்சி என்பது பெருமைக்குரிய தருணம்.
விரைவில் 100 பில்லியன் டாலர்: முதல்வர் ஸ்டாலின் தலைமையின்கீழ் இது சாத்தியம் ஆகியுள்ளது. இது தொடக்கம்தான். விரைவில் 100 பில்லியன் டாலரை மின்னணு பொருட்கள் ஏற்றுமதி எட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக, கர்நாடகா (7.85 பில்லியன்), உத்தர பிரதேசம் (5.26 பில்லியன்), மகாராஷ்டிரா (3.51 பில்லியன்), குஜராத் (1.85 பில்லியன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.