இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உணவு வகைகளுக்கு முக்கியமான ஸைடிஸ்களில் ஒன்று மையோனைஸ். சமைக்கப்படாத முட்டை, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் உணவு மையோனைஸ். அதில் பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது, முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தெலங்கானா மாநிலத்தில் மையோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.