அரசன் கோட்டையிலுள்ள ஒரு பள்ளி மாணவி காணாமல் போகிறார்.
அவரைத் தேடித் தரச் சொல்லி, முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா (கேத்ரின் தெரசா) புகாரளிக்கிறார்.
அதோடு, அவ்வூரில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களைச் செய்யும் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் (அருள்தாஸ்) குறித்தும் புகாரளிக்கிறார்.
அதனால், அப்புகார்களை விசாரிக்க அந்த பள்ளியில் ஆசிரியராக ஒரு அண்டர்கவர் போலீஸை நியமிக்கிறது காவல்துறை.

மலையரசன் சகோதரர்களின் அட்டூழியமும் அராஜகமும் பள்ளிக்குள்ளும் அதிகரிக்க, அதே பள்ளியின் பி.இ.டி மாஸ்டர் சரவணன் (சுந்தர்.சி), இவற்றுக்கு எதிராகக் களமிறங்குகிறார்.
இவருக்கு உதவியாக சுஜிதா, இன்னொரு பி.இ.டி மாஸ்டர் சிங்காரம் (வடிவேலு), கணக்கு வாத்தியார் (பகவதி பெருமாள்) ஆகியோர் துணை புரிகிறார்கள்.
பள்ளிக்குள் நுழையும் அண்டர்கவர் போலீஸ் யார், மலையரசன் சகோதரர்களின் கொட்டம் அடங்கியதா, அவர்களுக்குப் பின்னாலுள்ளவர் யார், சரவணனின் பின்னணி என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படம்.
ஆர்ப்பாட்டமில்லாத ஹீரோ மோடில், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லா பாக்ஸிலும் டிக் அடிக்கிறார் சுந்தர்.சி.
சுந்தர்.சி-யின் காமெடி யுனிவர்ஸிற்குள் கெட்டப், கவுன்ட்டர் காமெடி, உடல்மொழி, நீண்ட வசன காமெடி என எல்லா அணைகளையும் நிரப்பியிருக்கிறார் ‘வைகை புயல்’ வடிவேலு.
திரைக்கதையோடு இயைந்து வரும் முக்கிய கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
ஹரீஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோர் தேவையான மிரட்டல் உருட்டல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

பகவதி பெருமாள், முனீஸ் காந்த், காளையன் ஆகியோர் காமெடி மீட்டரில் கச்சிதமாகப் பொருந்தி, கிடைக்கும் இடங்களில் விளாசியிருக்கிறார்கள்.
வாணி போஜன் கௌரவத் தோற்றத்தில் தலை காட்டிச் செல்கிறார்.
லைட்டிங்கிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் ஓவர் டியூட்டி பார்த்திருக்கும் இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாகப் படத்தை மெருகேற்றியிருக்கிறது.
ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழியோட்டத்திற்குக் கைகொடுத்திருக்கிறது பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு.
சத்யா.சி-யின் இசையில் பாடல்கள் எதுவுமே நம் காதுகளுக்கு கம்பெனி கொடுக்கவில்லை.
ஆக்ஷன், பரபர காட்சிகள், காமெடி சீக்வென்ஸ் போன்றவற்றில் பின்னணி இசை ஆங்காங்கே பட்டாசாக வெடிக்கிறது.
ஊரின் கதை, பள்ளியின் கதை, கதாபாத்திர அறிமுகம் என நிதானமாக நகர்ந்தாலும், யூகிக்கும்படியான காட்சிகள், லாஜிக் ஓட்டைகள், அதிகம் அழுத்தமில்லாத காட்சிகளால் சிறிது சோர்வையும் சேர்த்தே தருகிறது திரைக்கதை.
தொடக்கத்தில் வரும் வடிவேலுவின் பழைய பாணியிலான சில காமெடி காட்சிகளும் ஓகே ரகமாகவே தப்பிக்கின்றன.
‘சுந்தர்.சி-யின் சினிமாடிக் யுனிவர்ஸ்’ முழுமையாகத் தொடங்கியவுடன், இப்பிரச்னைகள் மறையத் தொடங்குகின்றன.
முனீஸ்காந்த் – வடிவேலு காட்சிகள், வில்லன்களிடம் வடிவேலு மாட்டும் காமெடிகள் எனச் சில காமெடித் தொகுப்புகளும், சின்ன சின்ன காமெடிகளும் முதல் பாதியைக் காப்பாற்றுகின்றன.

இரண்டாம் பாதிதான் திருப்பங்கள், பின்கதை, சென்டிமென்ட், காமெடி, பாடல் என கம்ப்ளீட் பேக்கேஜாக மாறுகிறது.
பிரதான கதாபாத்திரங்கள் ‘கேங்கர்ஸ்’ ஆக உருவாகும் இடம், அவர்களுக்கு வரும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் இடங்கள், வடிவேலு வெவ்வேறு கெட் அப்களில் காமெடி கதகளி ஆடும் தொகுப்புகள் என எக்கச்சக்க காமெடி எபிசோடுகள் இரண்டாம் பாதியை ஃபுல் மீல்ஸாக மாற்றியிருக்கின்றன.
‘டெலக்ஸா’ காமெடி, அதற்குள் வரும் ‘சின்னத் தம்பி’ ரெஃபரன்ஸ், ’12ரூ ஜூஸ்’ காமெடி, பம்பாய் லாக்கர் கம்பெனி ‘சார்லஸாக’ வடிவேலு செய்யும் அலப்பறைகள் எனக் குறிப்பிடத்தகுந்த ‘கலகலப்புகள்’ ஏராளம்!
முக்கியமாக, கெட் அப் போடுவது, பாடுவது, ஆடுவது என வைகையாற்று வெள்ளமாக இரண்டாம் பாதியை நிறைக்கிறார் வடிவேலு.
க்ளைமாக்ஸ் தியேட்டர் தொகுப்பில், ‘மத கஜ ராஜா’, விஷால் ஆகியவற்றோடு ‘கலகலப்பு’ யுனிவர்ஸையும் தொட்டுச் சென்றிருக்கும் இடங்கள் ஸ்மார்ட்டான ரைட்டிங்!

அதேநேரம், புதுமையில்லாத பின்கதை, தொந்தரவாக வரும் பாடல்கள், காரணமில்லாமல் வரும் திருவிழா காட்சிகள் போன்றவை இரண்டாம் பாதியில் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
அதிலும் கேத்ரின் தெரஸாவின் கிளாமர் சாங் இந்தப் படத்துக்கு எதற்கு சாரே?!
இயற்பியல், வேதியியல், புவியியல் என எல்லாவற்றுக்கும் சவால்விட்டு, எள்ளளவிற்குக்கூட லாஜிக்கைத் தொடாமல் அடம்பிடித்திருக்கிறது சுந்தர்.சி – வெங்கட் ராகவன் கூட்டணியின் திரைக்கதை.
சிறார்களைப் பாலியல் குற்றவாளிகளாகச் சித்திரிக்கும் காட்சிகளைப் பொறுப்புணர்வோடு அணுகத் தவறுகிறார் இயக்குநர்.
மேலும், காமெடி வசனங்கள் என்கிற பெயரில் உருவக்கேலி, பாலினக் கேலி, பெண்களைக் கொச்சைப்படுத்துதல் போன்றவற்றை பத்ரி – வெங்கட் ராகவனின் வசனக் கூட்டணி தவிர்த்திருக்கலாம்.
குறைகளைக் கடந்து, “லாஜிக்க பார்க்காதீங்க; மேஜிக்க பாருங்க” எனச் சொல்லி, காமெடி கூட்டாஞ்சோற்றைப் பரிமாறியிருக்கிறது இந்த சுந்தர்.சி-யின் ‘கேங்கர்ஸ்’.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…