சென்னை: தமிழகத்தில் முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் 824 பணிகள் நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், “சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுமா? தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நடைபெறும் திருப்பணிகளை போல, அறுபடை வீடுகள் அல்லாத கோயில்களிலும் திருப்பணிகள் நடைபெறுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசியது: “சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வார இறுதிநாட்களில் 50 ஆயிரம் பக்தர்களும், வார நாட்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான பக்தர்களும் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நாள்தோறும் அன்னதானம் திட்டமும், மருத்துவ வசதி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்குள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் 110 முருகர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு முருகன் கோயில்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் ரூ.1,085 கோடியில் 824 பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆட்சியில் முருகன் கோயில்களுக்கு செய்யப்படும் திருப்பணிகள் தொடரும்,” என்று அவர் பதில் அளித்தார்.