கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், அதிமுக, பாஜக தவிர்த்து, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித்தலைவர்கள் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் பேசியதாவது:
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): 50 ஆண்டுகளுக்கு முன்பே மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் பெயரில் 5 பல்கலைக்கழகங்களை தொடங்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): பன்முகத்தன்மை கொண்டவரும், தமிழகத்தில் அரசு கல்லூரிகள் தொடங்க கொள்கை முடிவு எடுத்த, சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்த கருணாநிதியின் பெயரை பல்கலைக்கழகத்துக்கு வைக்க வேண்டும்.
சிந்தனைச்செல்வன் (விசிக): திருமாவளவனின் மாபெரும் பேராசான் கருணாநிதி. அரசியல் மட்டுமல்லாது பண்பாட்டு தளத்திலும் சிறந்து விளங்கியவர். பல்கலைக்கழகமாகவே வாழ்ந்த அவரின் பெயரை பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும்.
வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கருணாநிதி என்ற சொல் ஒரு சரித்திரம். தமிழில் அவர் ஜாம்பவான்..தேசிய அரசியலையே புரட்டிப் போட்டவர். அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சமூக நீதியை தமிழ் மண்ணில் நிலைநாட்டியவர். தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும்.
சதன் திருமலைக்குமார் (மதிமுக): கலை, இலக்கியம், பொருளாதாரம், சரித்திரம், எழுத்து, சினிமா என பன்முகத்தன்மை கொண்டவர். மக்கள் மீது அக்கறை கொண்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திய அவர் பெயரை பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால்தான் தொழில் படிப்புகளில் அவர்களால் சேர முடிந்தது. அதனால் அவர் பெயரை பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும்.
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): கல்வி மூலம்தான் சமுதாயம் முன்னேறும் என்பதை உணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, உள்ஒதுக்கீட்டை வழங்கினார். அவர் பெயரை பல்கலைக்கழகத்துக்கு வைப்பதுதான், அவருக்கு செய்யும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.
தி.வேல்முருகன் (தவாக): மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி அமைக்கும் கொள்கை முடிவை, மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி மூலம் கொண்டு வந்து, 36 கல்லூரிகளை கொண்ட மாநிலமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் பெயரில் சென்னையிலேயே பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: என்னை வளர்த்து ஆளாக்கி, அரசியலில் நிலைக்க வைத்தவர் கருணாநிதி. அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சிறப்பு தீர்மானம் கொண்டுவந்த கட்சித் தலைவர்களுக்கு எனது நன்றி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அவருக்கு சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், அதை முன்மொழியச் சொன்னவர் கருணாநிதி. அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு: முதல் பட்டதாரிகள் உயர்கல்வியை இலவசமாகப் படிக்கும் திட்டத்தை கருணாநிதி செயல்படுத்தினார். அவ்வாறு படித்தவர் இப்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக உள்ளார். அவர் கூறும்போது, “கருணாநிதி அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்திருந்தால், நான் இந்த பதவியில் இருந்திருக்க மாட்டேன்” என்றார். எனவே இந்த தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்ததாவது: நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இருப்பதற்கு பல்வேறு தலைவர்கள் காரணமாக இருந்தாலும், அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம், பல்கலைக்கழகமாக விளங்கும் அவரின் பெயரில், அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். இதை ஆதரித்து பேசிய அனைத்து எம்எல்ஏ.க்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கோ.வி.செழியன் பேசும்போது, ‘‘இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
க.அன்பழகன் எம்எல்ஏ பேசும்போது, ‘‘கும்பகோணத்தில் திமுகவை வளர்க்க கருணாநிதி நடக்காத தெருக்கள் இல்லை. அவர் பெயரில் கும்பகோணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார். மேலும், ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்ற திரைப்படப் பாடலை பாடி முதல்வரை வாழ்த்தினார்.