தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் ‘நிழற்குடை’ திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜித் கதாநாயகனாகவும், கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், வடிவுக்கரசி, நீலிமா ஆகியோர் நடித்திருக்கின்றனர். வரும் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் கலந்துகொண்டார். தேவயானி குறித்து பேசிய நகுல், ” அக்கா தேவயானிக்கு நான் தம்பியாக பிறந்ததைப் பாக்கியமாக நினைக்கிறேன். சிறிய வயதில் இருந்து அக்காவின் கடின உழைப்பைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதுமே அவரிடம் ஆட்டிட்யூட்(Attitude) இருக்காது.
என்னுடைய அக்காவைப் பார்த்தால் எனக்கு அம்மா மாதிரிதான் தோன்றும். மிகவும் தன்னடக்கமாக இருப்பார். இந்தக் கதை கூட அக்காவிற்கு சிறப்பாகப் பொருந்தும். என்னுடைய வாழ்க்கையில் அக்கா மாதிரியான நபரைப் பார்த்ததே கிடையாது.
கரியர் மற்றும் குடும்பத்தை சரியாகக் கையாண்டிருக்கிறார். கதையைக் கூட சிறப்பாகத்தான் தேர்வு செய்வார். 3 மாதம் டைரக்ஷன் கற்றுக்கொண்டார். ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.

அந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. என்னுடைய அக்கா இப்போது நடிகை மட்டும் அல்ல ஒரு இயக்குநரும் கூட. அதனை நான் பெருமையாகச் சொல்லுவேன். ‘You Are Best’ அக்கா” என்று நகுல் பாராட்டி பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த தேவயானி தம்பி பேசியதை நெகிழ்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…