Pahalgam Attack: “காஷ்மீரில் எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.." – தந்தையை இழந்த பெண் உருக்கம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் (Pahalgam Attack) தந்தையை இழந்த இளம் பெண், தனக்கு இரண்டு காஷ்மீரி சகோதரர்கள் கிடைத்துவிட்டார்கள் எனக் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொச்சியைச் சேர்ந்த ஆர்த்தி மேனன் என்ற பெண் குடும்பத்துடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். திடீரென நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 65 வயது தந்தையை இழந்தார்.

ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஆர்த்தி, “நாங்கள் முதலில் பட்டாசு வெடிக்கிறது என நினைத்தோம். ஆனால் இரண்டாவது சத்தத்தில் இது தீவிரவாத தாக்குதல் என உணர்ந்துகொண்டோம்.” எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் (Pahalgam Terrorist Attack)

சின்ன சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில் ஆர்த்தி அவரது தந்தை மற்றும் 6 வயது இரட்டை-மகன்களுடன் நடந்திருக்கிறார்.

“நாங்கள் தப்பிப்பதற்காக வேலிக்கு கீழே சென்றோம். மக்கள் எல்லாபக்கமும் சிதறி ஓடினர். நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம். அப்போது காட்டுக்குள் இருந்து வந்த ஒருவன் நேராக எங்களைப் பார்த்தான்.” அந்த நபர் அவர்களை நோக்கி சில வார்த்தைகளைக் கூறியதாகவும், அவற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என நாங்கள் பதிலளித்தோம். அடுத்த நொடியில் என் தந்தையை நோக்கி சுட்டான். என் மகன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் அவர்கள் வேறுபக்கமாக நடந்து சென்றனர். என் தந்தை இறந்துவிட்டார் என எனக்குப் புரிந்தது, நான் என் மகன்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். எங்கே செல்கிறேன் எனத் தெரியாமல் நடக்கத் தொடங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

சிக்னல் கிடைத்த உடனேயே ஓட்டுநர் முசாஃபிருக்கு கால் செய்துள்ளார் ஆர்த்தி.

இந்த பேரச்சம் சூழ்ந்த நிலையில் இரண்டு காஷ்மீர் ஆண்கள் வெளிப்படுத்திய கரிசனத்தை நினைவு கூர்ந்துள்ளார் ஆர்த்தி.

Pahalgam Attack
Pahalgam Attack

“எங்கள் ஓட்டுநர் முசஃபிசூரும், சமீர் என்ற மற்றொரு நபரும் என் சகோதரர்களாக மாறிவிட்டனர். எல்லாவற்றிலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். பிணவறைக்கு என்னுடன் வந்தனர், ஃபார்மாலிட்டிகளில் உதவினர், அதிகாலை 3 மணிவரை அங்கேயே காத்திருந்தேன், என்னை ஒரு தங்கையைப் போல கவனித்துக்கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.

ஆர்த்தி ஶ்ரீநகரில் இருந்து வெளியேரும்போது, “எனக்கு இப்போது காஷ்மீரில் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அல்லாஹ் உங்கள் இருவரையும் பாதுகாக்கட்டும்.” என அவர்களிடம் கூறியுள்ளார்.

இந்த கடினமான சூழலைக் கடந்து வந்தது பற்றி, “நான் ஸ்ட்ராங்காக இருப்பதுபோல காட்டிக்கொண்டேன். என் அம்மாவையும் மகன்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் என்னால் சோர்ந்து விட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.