இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துப்பாக்கிச் சண்டை

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நீர்வளத்துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளைத் தடுக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய கடமை ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படையானது. அதற்கு பதிலாக நாங்கள் கண்டது இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிதர்களுக்கான அமைப்பான பனுன் காஷ்மீர், காஷ்மீருக்கான பயண ஆலோசனையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். பள்ளத்தாக்கில் நிலைமை “இயல்பிலிருந்து வெகு தொலைவில்” உள்ளது. சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இந்துக்கள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்குச் செல்வார் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சந்தைகள் அடைப்பு: 26 உயிர்களைப் பலிகொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியின் சாந்தினி சவுக்கில் உள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.