ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த போல்ட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரெயில்வே ஊழியர் ஒருவர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகளை கழற்றி ரெயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “அடையாளம் தெரியாத நபர்கள் தண்டவாள பாதுகாப்புகளை சேதப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ரெயில்வே ஊழியர்களின் எச்சரிக்கை காரணமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த கொடூர முயற்சிக்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.