சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரிரங்கன் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன்.
மிகச் சிறந்த அறிவியலாளராக இருந்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.