சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் நேற்று மாலை 5 மணியளவில் இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலறிந்த உடன் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் பிரிவினர், பழனிசாமி வீட்டுக்கு விரைந்து சென்று, சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் மூலம் அங்கு பல மணி நேரம் சோதனை நடைபெற்றது.
ஆனால் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. அதேபோல் பழனிசாமி, சட்டப்பேரவை செல்லும் வழியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஜிப்மர் மருத்துவமனையிலும் வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் அந்த மின்னஞ்சல் வதந்தி என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.