Doctor Vikatan: திடீரென சம்பந்தமில்லாமல் பேசும் மாமனார்.. சோடியம் குறைந்ததுதான் காரணமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது.  கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களை உளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று ஒரு செய்தியில் படித்ததாக நினைவு. என் மாமனாரின் இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… சோடியம் அளவை எப்படிப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்… இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

திடீரென ஒரு நபர் இப்படி சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார் என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு வயதாவதன் காரணமாக நினைவிழப்பு ஏற்பட்டு, டிமென்ஷியா  போன்ற பிரச்னையின் அறிகுறியாகவும் இப்படி நிகழலாம்.

ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் பாதித்ததன் காரணமாகவும் சிலருக்கு இப்படி படிப்படியாக நினைவிழப்பும் குழப்பமும் ஏற்படலாம். சிலருக்கு உடலில் சோடியம் அளவோ, சர்க்கரை அளவோ குறைவதாலும் இப்படி நிகழலாம். திடீரென ரத்த அழுத்தம் குறைவதாலும் குழப்பமான மனநிலை ஏற்படலாம். கோடைக்காலத்தில் வெயிலின் உச்சபட்ச பாதிப்பின் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அதன் விளைவாகவும் நினைவிழப்பு, குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படலாம். எனவே, உங்கள் மாமனாருக்கு ஏற்பட்ட அறிகுறிக்கு சோடியம் குறைந்ததுதான் காரணம் என நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

மருத்துவர் அவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். நரம்பியல் மண்டலத்துக்கான பரிசோதனையும் மேற்கொள்வார்.

மருத்துவர் அவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். நரம்பியல் மண்டலத்துக்கான பரிசோதனையும் மேற்கொள்வார். அவருடைய பேச்சு எப்படியிருக்கிறது, தசைகளின் பலம் எப்படியிருக்கிறது, மற்ற விஷயங்களுக்கு அவர் எப்படி பதிலளிக்கிறார் என்றெல்லாம் பார்ப்பார்.

ரத்தப் பரிசோதனையின் முடிவைப் பார்த்து, மூளையை பரிசோதிக்க வேண்டுமா, சி.டி ஸ்கேன் தேவையா என்றும் முடிவு செய்வார். இப்படி எல்லா டெஸ்ட்டுகளையும் வைத்துதான் உங்கள் மாமனாரின் திடீர் நடத்தை மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன்பிறகுதான் சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும்.

சோடியம் அளவு குறைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது முக்கியம். குறைந்த அளவுதான் என்றால் அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உடலில் நீர்வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டாலே சரியாகிவிடும்.

அதுவே சோடியம் ரொம்பவே குறைந்திருக்கிறது என்றால் மருத்துவமனையில் அட்மிட் செய்து அதன் அளவைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டவர்களுக்கும், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வலிப்பு போன்ற சில பிரச்னைகளுக்கான மருந்துகளின் பக்க விளைவாலும், போதுமான உப்பு உடலுக்கு சேராத பட்சத்திலும் சோடியம் குறைபாடு ஏற்படலாம்.

உடலில் நீர்வறட்சி இல்லாமல் பார்த்துக்கொண்டாலே சரியாகிவிடும்.

எனவே, அதன் அளவைப் பொறுத்தே சாதாரண பிரச்னையா, கோமா வரை கொண்டு செல்லக்கூடிய தீவிர பிரச்னையா என்றும் முடிவு செய்யப்படும்.

முதல் வேலையாக உங்கள் மாமனாரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். யூகத்தின் அடிப்படையில் எதையும் முடிவு செய்துவிட்டு, அலட்சியமாக இருக்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.