''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்'' – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

ஹைதராபாத்: பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் ஹைதராபாத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த தாக்குதலை நிகழ்த்திய பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்.

நாங்கள் உங்களை முன்னோக்கி நகர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம், 140 கோடி இந்தியர்களான நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல. வலுவாக பதிலளிக்க வேண்டிய நேரம் இது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 4 கோடி மக்களும், உலகில் குறைந்தது 100 நாடுகளில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் எங்கள் பிரதமருக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

1967 ஆம் ஆண்டு சீனா நம்மை தாக்கியபோது, அப்போதைய பிரதமர் ​​இந்திரா காந்தி உறுதியாக பதிலளித்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தாக்கியபோதும் ​​இந்திரா காந்தி தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கினார்.

பாகிஸ்தானின் செயல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. நாம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது. பொருத்தமான பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.

இந்த போராட்டத்தை அடுத்து அசாதுதீன் ஒவைசி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். ரேவந்த் ரெட்டி மற்றும் ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்களுடன் சேர்ந்து, கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் நான் பங்கேற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.