சென்னை: பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் மொத்த பட்டாசுகளில் சரி பாதிக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சிவகாசியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கும் நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை திமுக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தாததே அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.