ஜம்மு காஷ்மீர் அருகே உள்ளது பகல்காம். இந்தியாவின் சுதர்லாந்து என அழைக்கப்படும் இப்பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்யா பயங்கரவாத அமைப்பின் நிழல் பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் பொறுப்பேற்ற நிலையில், இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை முற்றிலுமாக துண்டித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய செளரவ் கங்குலி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய மண்ணில் ஏதேனும் ஒரு பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இது நகைச்சுவையாக மாறிவிட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை இந்தியா முற்றிலுமாக முறித்துக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் இந்தியா இதை செய்ய வேண்டும். ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என அவர் தெரிவித்தார்.
முன்னதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லாவும் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை. மேலும் இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஆனால் ஐசிசி நிகழ்வுகளைப் பொறுத்தவரை, ஐசிசி ஈடுபாட்டின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பதை ஐசிசி அறிந்திருக்கிறது என கூறி இருந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவதை இந்தியா நிறுத்திக்கொண்டது. இதேபோல் பாகிஸ்தான் அணி கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டில் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. ஆனால் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கூட பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் பிசிசிஐ பாகிஸ்தானில் விளையாட மறுத்தது. இதன் காரணமாக ஐசிசி இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் மைதானத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சூழல் இப்படி இருக்கையில், தற்போது பகல்காம் தாக்குதல் சம்பவம் வேறு அரங்கேறி உள்ளது. எனவே கங்குலி கூறும்படி பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் உறவை இந்தியா முற்றிலுமாக கைவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: அந்த நான்கு பேர் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!
மேலும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!