மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி பரிசோதனை முடித்தப் பிறகே, இந்த திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மே மாதம் முதல் வாரம் முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்த இந்த திட்டம் மீண்டும் ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த கால் நூற்றாண்டாக வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் அடுத்த 50 ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில், 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க ‘அம்ரூத்’ திட்டத்தில் ரூ.1,295.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
‘கரோனா’ தொற்று பரவல், வனத்துறை ஒப்பதல் கிடைப்பதில் தாமதம், தேனி விவசாயிகள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட இழுபறி போன்ற பல்வேறு தடைகளை தாண்டி, தற்போது இந்த திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து முல்லைப் பெரியாறு தண்ணீர் பண்னைப் பட்டியில் சுத்திகரித்து, மதுரைக்கு தினமும் இந்த குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முறையில், இந்த திட்டத்தில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்னும் கூடுதலாக 20 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை நிறைவு செய்து மே முதல் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் இந்த திட்டத்தின் தொடக்க விழா ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. பெரியாறு குடிநீர் திட்டத்தில் 38 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 34 பழைய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பெரியாறு குடிநீர் 100 வார்டுகளுக்கும் இந்த திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “எந்த ஒரு குடிநீர் திட்டமும் முழுமையாக நிறைவுப் பெற்று தொடங்கி வைக்கப்பட்டதாக வரலாறு இல்லை. அந்த அடிப்படையிலே 40 முதல் 50 வார்டுகளுக்கு இந்த திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்து முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்தது. மீதமுள்ள வார்டுகளில் நடக்கும் குடிநீர் விநியோக குழாய்கள் பதிக்கும் பணி, வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைவுப்படுத்தி வரும் செப்டம்பரில் 100 வார்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஏனெனில், இந்த திட்டத்தில் புதிய குடிநீர் குழாய்கள் கொடுக்கும் பணியை முடிக்க வரும் டிசம்பர் வரை காலக்கெடு இருந்தது. ஆனால், இந்த திட்டத்தை தொடங்கியது அதிமுக ஆட்சியில் என்பதால் அக்கட்சியினர் 100 வார்டுகளிலும் தொடங்கி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதனால், குறைவான வார்டுகளில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தால் விமர்சனம் வரும் என்பதால் தற்போது முழுமையாக இந்த திட்டத்தை முடிக்க பணிகளை விரைவுப்படுத்த மதுரை மாநகராட்சியை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முன்னாள் ஆணையர் தினேஷ்குமார் முதல் தற்போது புதிதாக வந்துள்ள சித்ரா வரை, இந்த திட்டத்தை விரைவுப்படுத்தியதால் இந்த திட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது,” என்றனர்.
‘ஸ்கேடா’ முறையில் குடிநீர் விநியோகம் கண்காணிப்பு: அதிகாரிகள் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு மேல்நிலை குடிநீர் தொட்டியில் நிரப்பப்புடும் குடிநீர், டிஎம்ஏ (disting metering area, குடிநீர் இணைப்புகள் எண்ணிக்கை) வாரியாக 100 வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில வார்டுகளில் 2 டிஎம்ஏ அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையில் தற்போது 100 வார்டுகளுக்கும் 195 டிஎம்ஏ அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், தற்போது வரை 70 டிஎம்ஏ – பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கி வெள்ளோட்டம் பார்த்து பெரியாறு குடிநீர் வழங்கப்படுகிறது. லோயர் கேம்ப் பகுதியில் இருந்து 120 கி.மீ. தொலைவை கடந்து மதுரைக்கு குடிநீர் வருகிறது. இடையில் பன்னைப்பட்டி இந்த குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
அதனால், லோயர் கேம்ப் முதல் மதுரை வரை இந்த குடிநீர் வரும் குழாய்களில் எவ்வளவு ப்ரஷர் குடிநீர் வருகிறது என்பதை (scada system) ஸ்கேடா முறையில் கணிணியில் ஆன்லைன் முறையிலே பரிசோதனை செய்யலாம். எங்கு ப்ரஷர் குறைகிறதோ அங்கு ஏதோ பிரச்சனை உள்ளதாக கண்டுபிடித்து விடலாம்” என்றனர்.