வாடிகன் சிட்டி,
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்த சூழலில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்பட்டது. பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக உலக தலைவர்கள் ஏராளமானோர் புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவியுடன் வாடிகன் நகருக்கு சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா என பல நாடுளின் தலைவர்கள் வாடிகன் வந்து, இறுதி சடங்கில் பங்கேற்றனர்.
முன்னதாக போப் பிரான்சிசின் இறுதிச் சடங்கிற்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சிறிது நேரம் சந்தித்தார் என்பதை வெள்ளை மாளிகை மற்றும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் உறுதிப்படுத்தி இருந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இது ஒரு நல்ல சந்திப்பு. நாங்கள் நேரில் நிறைய விவாதித்தோம். நாங்கள் உள்ளடக்கிய அனைத்திலும் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். எங்கள் மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம். மற்றொரு போர் வெடிப்பதைத் தடுக்கும் நம்பகமான மற்றும் நீடித்த அமைதி. கூட்டு முடிவுகளை அடைந்தால், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறக்கூடியதாக இந்த சந்திப்பு அமையும். அமெரிக்கா ஜனாதிபதிக்கு நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.