மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை வழங்க வகை செய்யும் திருத்த சட்ட மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் (அதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் வலியுறுத்தினர். என்னென்ன திருத்தங்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக தருமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். இந்த மசோதா வரும் ஏப்ரல் 29-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்: உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
கள்ளச் சாராயம், சைபர் கிரைம், மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே முன்பு தடுப்பு காவல் அளிக்கப்பட்டது. இனிமேல், உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுபவருக்கும் தடுப்பு காவல் விதிக்கப்படும். இந்த மசோதாவின்படி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி, விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.