“இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்…” – கோவையில் விஜய் பேசியது என்ன?

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டும்தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.

கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது:

பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை வாக்குடன் தொடர்புடையது அல்ல. வாக்கு பெறுவது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்து பின்னர் என்ன செய்யப் போகிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும் இந்தப் பட்டறை நடத்தப்படுகிறது. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்கள் நலனுக்காக மட்டும்தான். மக்களுடன் இணைந்து செயல்படும் வழிமுறைகளை பயிற்சிப் பட்டறை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சியைப் பிடித்திருப்பார்கள். இனிமேல் அது நடக்காது. நம் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை கொண்டுவரப் செய்யப்போவது பூத் கமிட்டி முகவர்கள்தான். அவர்கள் போர் வீரர்களுக்குச் சமமானவர்கள்.

மனதில் நேர்மை, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற உறுதி, லட்சியத்துடன் உழைக்க தெம்பு, பேசுவதற்கு உண்மை, செயல்பட திறமை, அர்ப்பணிப்பு குணம் ஆகியவற்றுடன் களம் தயாராக உள்ளது. களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

உற்சாக வரவேற்பு: முன்னதாக, நேற்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய்-க்கு கட்சித் தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளஇத்தனர். விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் இருந்து அவிநாசி சாலை வரை ஏராளமானோர் திரண்டிருந்தனர். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் குவிந்திருந்தனர். இதனால், விமான நிலையம், சிட்ரா பகுதி மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற எஸ்.என்.எஸ். கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் இன்று இரவு தங்கும் விஜய் நாளை நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பின்னர் இரவு சென்னை திரும்புகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.