கடந்த ஜனவரி மாதம், மும்பையில் தெருநாய்களுக்கு உணவளிப்பதனால், தான் வசிக்கும் குடியிருப்பின் நிர்வாகக் குழு தனக்கு துன்பம் ஏற்படுத்துவதாக லீலா வர்மா என்ற பெண்மணி உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு சங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
ஜனவரி 21 அன்று, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தெரு நாய்களுக்கு உணவு வழங்குதல் அல்லது அதற்கென நியமிக்கப்பட்ட பகுதிகள் குறித்து குடியிருப்பு சங்கத்திற்கு ஏதேனும் குறைகள் இருந்தால், குடியிருப்பாளர்களைத் துன்புறுத்துவதற்குப் பதிலாக நகராட்சியை அணுக வேண்டும் என்று கூறியது.

சட்டத்தின்படி, குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள் (RWAs) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்கள் (AOAs) தங்கள் வளாகத்தில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனுமதிக்கவேண்டும் என்றும், உள்ளூர் அதிகாரிகள் உணவளிக்கும் பகுதிகளை நியமித்து சமூக விலங்குகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் வர்மா தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதனை அடுத்து லீலா வர்மா இருக்கக்கூடிய வீட்டு வசதி சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினரான வினிதாஸ்ரீநந்தன் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக “நாய் மாஃபியா” என்ற கருத்தை மற்ற குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
பரிமாறிக் கொள்ளப்பட்ட அந்த மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 23, Bombay High Court நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி மற்றும் அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ஸ்ரீநந்தனின் மன்னிப்பை ஏற்க மறுத்து, “முதலைக் கண்ணீரையும், இதுபோன்ற வழக்குகளில் கண்டனம் செய்பவர்களால் வழக்கமாகக் கேட்கப்படும் மன்னிப்பு மந்திரத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று கூறியது.
மேலும், நீதிமன்றத்தை `நாய் மாஃபியா’ என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று கூறியதுடன், வினீதா ஸ்ரீநந்தனுக்கு ஒரு வாரம் எளிய சிறைத்தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.