புதுடெல்லி: “ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள்” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள். மவுன்ட்பேட்டன் ஆட்சிகாலத்தில் இருந்து அவர்கள் அனைவரும் தங்களுடைய ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்று பாருங்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலையும் தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.
1988ஆம் ஆண்டு நான் முதல்முதலில் காசிக்கு சென்றபோது அது சிறுநீர் கழிக்கும் ஒரு இடம்போல காட்சியளிக்கும். ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. இதை யார் செய்தது? கங்கை நதி மிகவும் சுத்தமான நீர். அதில் மக்கள் அசுத்தங்களை செய்து கொண்டிருந்தனர். அவர்தான் சரியான திட்டமிடலுடன் அதை சரிசெய்தார். இன்னும் அதற்கான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டின் மீது பற்று இல்லாத ஒருவரால் இதை செய்யவே முடியாது.
நான் முன்பே குறிப்பிட்டதைப் போல மற்ற பிரதமர்கள் செய்ததையும், மோடி செய்ததையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும். நான் இன்னொரு கேள்வியையும் உங்களிடம் கேட்கிறேன். ஒருவேளை நமக்கு மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள். அப்படி யாரேனும் இருக்கிறார்களா?
பிரதமரால் எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் என் மீது மிகவும் அன்பானவர். அவர் அதை அறிவித்தார். அப்போது என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அது ஒரு அற்புதமான விஷயம். விழா முடிந்ததும், ஒரு தேநீர் விருந்து நடந்தது. அங்குதான் நான் அவரைச் சந்தித்தேன். அவரிடம் நான், ‘ஐயா, உங்களுக்காக நான் ஒரு பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் இந்தியாவை ஆள வேண்டும்.’ என்று கூறினேன். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது” இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.