போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்சவுர் மாவட்டம், நாராயண்கர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இன்று 14 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பைக் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது.
தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மண்ட்சவுர் காவல் கண்காணிப்பாளர் (SP) அபிஷேக் ஆனந்த் கூறுகையில், “வேன் ஒன்று, ஒரு பைக் ஓட்டுநர் மீது மோதியது, பின்னர் திறந்தவெளி கிணற்றில் விழுந்தது. கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து அவர்களை மீட்க முயன்றனர். மீட்புப் பணியின் போது, கிராமவாசி மோனோகர் சிங் இறந்தார், பைக் ஓட்டுநர் கோபர் சிங்கும் காயமடைந்து உயிரிழந்தார்” என்று கூறினார்.
இதற்கிடையில், கிணற்றில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள இரு உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜேசிபி மூலம் வேன் அகற்றப்பட்டுள்ளதாக எஸ்பி ஆனந்த் மேலும் தெரிவித்தார்.
மேலும், விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.