அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா: யார் யாருக்கு என்ன பொறுப்பு?

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார்.

இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.இதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால், அவர் மீண்டும் அமைச்சரானார். இதற்கிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த விவகாரத்தில், அவர் மீது வழக்கு பதிவு செய்யவும், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், அமைச்சரவையில் இருந்து இருவரும் நீக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவியை பொன்முடி, செந்தில் பாலாஜி இருவரும் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையை 6-வது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனம், காதி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித் துள்ளார்.

அதன்படி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறையும், வீட்டுவசதி, நகர்ப்புறமேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம், காதி துறைஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 28-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு பதவிபிரமாண நிகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அமைச்சர் ஆகிறார் மனோதங்கராஜ்: முதல்வரின் பரிந்துரையை, ஏற்று பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு, தற்போது ராஜகண்ணப்பனிடம் இருக்கும் பால்வளத் துறை மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை கடந்த 2024 செப்டம்பரில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதுதான் செந்தில் பாலாஜியும் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டு, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.