புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐபி) ஒப்படைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஒ), பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருடன் பகிர்ந்து கொண்டது. அடையாளங்களைச் சரிபாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட காலம் விசா அனுமதி வைத்திருக்கும், இந்து பாகிஸ்தானியர்களின் பெயர்களும் அடங்கும்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சரிபார்ப்பு பணிக்காக சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு இந்த பட்டியல் பகிரப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலேயே அதிக அளவிலான பாகிஸ்தானியர்கள் வசிக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நவடிக்கை எடுக்கும் படி டெல்லி போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகள் சூழலைக் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்களை விரைவில் இந்தியாவை விட்டு வெளியறேச் சொல்லும் பொறுப்பு டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்.27ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மருத்துவம், ராஜாங்க மற்றும் நீண்டகால விசாக்கள் வைத்திருப்பவர்களைத் தவிர பிற பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது தொடர்பாக வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. மருத்துவ விசாக்களும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்திருந்தது.