புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
இதையடுத்து சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என தெரிவித்தது. மேலும் இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது.
இந்தியாவில் குறுகிய கால விசாக்களில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறுகிய கால விசாக்களில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறத் தவறிய கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.