அரசி​யல் லாப நட்​டங்​களை பார்க்​காமல் திமுக கூட்டணியில் பயணிக்​கிறோம்: தொண்​டர்​களுக்கு வைகோ கடிதம்

சென்னை: அரசியல் லாப, நஷ்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

மதிமுக 32-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று தான் மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரசியல் லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது.

இந்த சூழலில் 2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியை பெறும். அதேநேரம், கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்.20-ம் தேதி மதிமுக நிர்வாகக் குழுவில் உணர்ச்சி பிரவாகமாக நிகழ்வுகள் நடந்தேறின. நீர் அடித்து நீர் விலகாது என்பதை கட்சியின் நிர்வாகக் குழு திட்டவட்டமாக பிரகடனம் செய்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வீடுகளில், நிர்வாகிகளின் சொந்த இடங்களில் கொடியேற்று விழாவை நடத்த வேண்டும். மேலும், நலத்திட்ட உதவி வழங்குதல், தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம் என சிறப்பாக கொண்டாட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117-வது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் அனைத்து சார்பு அமைப்புகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.