நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள்.
மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் எப்படி கிடைத்தது?
கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச்செயலாளராக இருந்தேன். கஜா புயல் பாதிப்பின்போது, மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காத நிலையில், அது குறித்து பேச வேண்டும் என நாதக தரப்பில் கேட்டனர். அது தொடர்பாக நாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் முதன்முதலில் பேசினேன்.
நான் பேசி முடித்ததும் அண்ணன் சீமான் அவர்கள் என்னை பாராட்டினார். ஒரு வாரம் கழித்து, நாதக சார்பில் 2019 மக்களவைத் தேர்தலில், வடசென்னை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று அண்ணன் என்னிடம் பேசினார். “நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை. ஆனால், என் மக்களுக்கான அரசியல் தளத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று சொன்னேன். “நீயே அந்த இடத்துக்கு வர விரும்பவில்லை என்றால் உங்கள் மக்களுக்கான அரசியல் தளத்தை எப்படி உருவாக்க முடியும்?” என்று அண்ணன் கேட்டார். அதன் பிறகு தான் அந்த தேர்தலில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றேன்.
உங்களை நாடறிந்த முகமாக மாற்றிய நாதக மீதும், சீமான் மீதும் உங்களுக்கு கசப்பு ஏற்படுத்திய நிகழ்வு எது?
என்னைப் போல் பலருக்கும் நாதக மேடை அமைத்து தந்துள்ளது. அந்த வாய்ப்பை நான் எம் மக்களுக்காக பயன்படுத்தினேன். நாதக-வில் பயணித்தபோது, சில மனக்கசப்புகள், கருத்து முரண்கள் அவ்வப்போது வந்து சென்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பற்றி தவறான தகவல்கள் தலைமைக்கு தெரிவிக்கப்படுவதாக தெரிய வந்தது. அப்போது அண்ணன் சீமானை சந்தித்து, “என்னைப் பற்றி தவறான தகவல்கள் உங்களுக்கு வருவதாக நான் கேள்விப்பட்டேன்” என்று சொன்னேன்.
அதற்கு, “நான் உன்னை ஏதாவது கேட்டேனா… கட்சியில் ஒருவர் வளர்ந்து வந்தால் ஒரு சிலருக்கு அது முரணாகத்தான் இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்… நீ என்னை நம்பலாம்” என்று நம்பிக்கையோடு பேசி அனுப்பி வைத்தார்.
உங்களை விமர்சித்து சீமான் பேசிய ஆடியோ வெளியானதுதான் மனக்கசப்புக்கு காரணமா?
அந்த ஆடியோ வெளியானபோது நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அது எனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியது, நாம் என்ன செய்தோம் என வருந்தினேன். அந்த ஆடியோவை அண்ணனுக்கு நான் தான் அனுப்பி வைத்தேன். பிறகு, அண்ணனுடன் இருக்கும் மாநில பொறுப்பாளர் ஒருவர் என்னிடம் பேசினார். “அண்ணன் ஒரு போதும் உன்னை தவறாகப் பேசமாட்டார்” என சமாதானம் சொன்னார். அதன்பின், திருவாரூர் நிகழ்ச்சிக்கு வந்த அண்ணன் சீமான், “மனதில் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். உன்னை நான் என்றுமே அப்படி நினைக்க மாட்டேன்” என்று சொன்னார். அதன் பிறகு நிறைய கூட்டங்களில் பங்கேற்றேன். நான் நாதக-வில் இருந்து வெளியேற காரணமான சம்பவங்களை சொல்ல விரும்பவில்லை.
பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து தனக்கென தனியாக கூட்டம் சேர்த்தார். கட்சி வளர்ச்சியை விட தனது வளர்ச்சியை பெரிதாக நினைத்தார் என சீமான் உங்கள் மீது குற்றம்சாட்டி இருந்தாரே..?
இதுவும் ஒரு ஆடியோ வடிவில் வெளியான குற்றச்சாட்டு தான். எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால், ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தனது தளபதியிடம் ரகசியமாக பேசுவது எப்படி பதிவு செய்யப்பட்டது, அது எப்படி வெளியானது, அவர்களை கண்டறிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, அத்தோடு தொடர்ந்து ஆடியோக்கள் வெளியாவது குறித்து ஏன் முழுமையான விசாரணை இல்லை என்பதுதான்.
அந்த சூழலில் நான் அண்ணனிடம், “ஏன் அண்ணா இப்படி பேசினீர்கள்? பணம் அல்லது பரிசுப் பொருள் கொடுத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் எனக்கு எதற்கு ஏற்படுகிறது? நான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்பதை என் வீட்டுக்கு வந்து பாருங்கள். சுனாமி குடியிருப்பில் குடியிருக்கும் நான் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியுமா?” என்று கேட்டேன்.
அதற்கு, “நீ ஆங்காங்கே கூட்டம் போடுவதாக சிலர் என்னிடம் சொன்னார்கள்” என்றார். “அதை என்னிடம் கேட்டிருக்கலாமே?” என்றேன். “ஆமாம் நானும் உன்னை கேட்டிருக்க வேண்டும். அதற்கான சூழல் அமையவில்லை. சரி அதனை விடு, நமக்கான அடுத்த களம் தயாராகி விட்டது, நீ வேலையில் கவனம் செலுத்து” என்றார்.
தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து கட்சிக்கே தெரியாமல் நீங்கள் பெருமளவு நிதி திரட்டியதாக சீமான் தரப்பு சொல்வது உண்மையா?
தேர்தல் நேரத்தில் பரப்புரைக்கான செலவுகளுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டது தான் உண்மை. தேர்தல் செலவுக்காக நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. சிலர் தங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவினர். இன்னும் சொல்லப்போனால், பரப்புரை வாகனம், ஆடியோ செலவுகளுக்காக இன்னும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டிய கடன் தான் உள்ளது.
நாதக-வில் உங்கள் வளர்ச்சியை சீமான் மனைவி கயல்விழி விரும்பவில்லை என்கிறார்களே?
காளியம்மாளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று அவர் பேசியதாக நான் அறியவில்லை. அதனால், அவர் மீது அவதூறு பரப்ப விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், சீமான் என்னை விமர்சித்த ஆடியோ வெளியான போது, என்னை தொடர்பு கொண்டு பேசிய கயல்விழி என்னை சமாதானப்படுத்தினார்.
பலரும் நாதக-வில் இருந்து விலகுவதை, “இலையுதிர் காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்” என்று சீமான் சொல்லியிருக்கிறாரே?
நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள் என்று அண்ணன் பகுப்பாய்வு செய்ய வேண்டும். களையை பிடுங்குவதாக கூறி விளைந்த பயிரை பிடுங்கிப் போட்டு விடக்கூடாது இல்லையா. பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதக-வில் யாரும் சேரவில்லை. ஆழமான தமிழ்த்தேசிய உணர்வோடு இந்தக் கட்சியில் செயல்பட்டவர்களுக்கு இந்தக் கருத்து வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணத்துக்காக நம்மை விட்டு பிரிகிறார்கள் என்று அண்ணன் யோசிக்க வேண்டும்.
இது என் கட்சி… நான் சொல்பவர்தான் நிர்வாகி, வேட்பாளர் என்று சீமான் சொல்வது பற்றி..?
மற்ற கட்சிகள் அதிகாரத் தன்மையுடன் முடிவெடுப்பதை விமர்சனம் செய்யும்போது, நாதக-வில் ஜனநாயகம் இருக்க வேண்டும் அல்லவா. முடிவு எடுப்பவர் தலைவராக இருந்தாலும், அதை ஜனநாயகபூர்வமாக எடுக்க வேண்டும். பல நேரங்களில் அவர் எடுக்கும் முடிவு சரியாக இருந்திருக்கலாம், ஆனால்…
அமைச்சர் பொன்முடி பெண்களை தரக்குறைவாக பேசியதை கனிமொழி உடனடியாக கண்டித்தார். விஜயலட்சுமிக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை சீமான் சொன்னதை புரட்சிப் பெண்ணான நீங்கள் கண்டிக்கவில்லையே?
பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்க வேண்டியது ஒரு பெண்ணாக எனது கடமை தான். ஆனால், உண்மையில் என்ன நடந்தது, யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் விஜயலட்சுமி பேசுகிறார் என்ற கேள்வியும் இருந்தது. மேலும், விஜயலட்சுமி தனது குற்றச்சாட்டில் உறுதியாக நிற்கவில்லை. அதோடு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை அது. அதில் விசாரணை எல்லாம் செய்ய முடியாது.
திமுக, அதிமுக, தவெக என பல கட்சியில் இருந்தும் உங்களுக்கு அழைப்பு வருகிறதாமே?
எல்லா கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வரத்தான் செய்யும். அதை ஏற்பதா, எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் அறிவிப்பேன்.
மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைத் தருவதாக இருந்தால் தவெக-வுக்கு வருவதாகச் சொன்னீர்களாமே?
ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்லும் போது, கட்சிப் பணியாற்ற பொருளாதார தேவை இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அதற்காக இப்படி மாதச் சம்பளம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்க முடியுமா? இப்படி நான் எந்த கட்சியிடமும் எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை.
கடலோர மக்களின் பிரச்சினைகளுக்கு ஆளுங்கட்சியால் உடனடியாக தீர்வு காண முடியும். அப்படி என்றால் திமுக-வில் இணைய வாய்ப்புள்ளதா?
ஏன் ஆளுங்கட்சி என்று சொல்கிறீர்கள்… ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியாக, சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்புள்ள கட்சியாகக்கூட அது இருக்கலாமே.
விஜய் கட்சியால் நாதக-வின் வாக்கு வங்கியில் கடுமையான சரிவு ஏற்படும் என்கிறார்களே?
வாக்கு சதவீதம் குறையுமா என்று ஆருடம் சொல்ல முடியாது. அதேசமயம், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு, மாற்று அரசியலை பலரும் விரும்புகிறார்கள். அண்ணன் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியுள்ளது. மேலும், புதிய வாக்காளர்கள் புதிய கட்சிகளை நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது. அவரவருக்கு வாக்கு செலுத்த நினைப்பவர்கள் செலுத்துவார்கள்.
தமிழக அரசியல் களம், சாதிக்க நினைக்கும் பெண்களை உண்மையிலேயே அரவணைத்துச் செல்கிறதா… அல்லது அடக்கிவைக்கவே நினைக்கிறதா?
நாட்டின் மொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் போது, அவர்களுக்கான அரசியல் பங்கேற்பு இல்லாத நிலை தான் தொடர்கிறது. அடையாளத்திற்காக மட்டுமே சில கட்சிகள் பெண்களை நிறுத்துகின்றனர். பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான பயமும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
நான் அரசியலுக்கு வந்த போதும் பல கேவலமான விமர்சனங்கள், அவமானங்களை கடந்து வந்துள்ளேன். அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து ஒரு பெண் அரசியலில் ஜெயிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போன்றது தான். அதோடு, ஒரு பெண் வளர்ந்து ஆளுமையாக வர வேண்டும் என்பதை சில பெண்களே விரும்புவதில்லை என்பதும் வேதனையான உண்மை.
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை உண்மையிலேயே தட்டிக் கேட்கும் எண்ணம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. கட்சியில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான பொறுப்பு கொடுத்தாலும், அந்த இடத்தில் பெண்ணிடம் கருத்து கேட்கப்படுவதில்லை. அரசியலில் இருக்கும் பெண்கள் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுங்கள்; அவர்கள் வரவே வராத அளவுக்கு பின் தள்ளிவிடாதீர்கள். உண்மையான அரசியல் பங்கேற்பை பெண்களுக்கு வழங்குங்கள்.