சென்னை: சென்னையில் வங்கி மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் என்ற புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார்.
தொடக்க விழாவில், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.