Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. குஜராத் அணி மட்டும் தற்போது 8 லீக் போட்டிகளை விளையாடி இருக்கிறது. மும்பை, பெங்களூரு, லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 10 போட்டிகளை விளையாடிவிட்டன. மற்ற 6 அணிகளும் தலா 9 போட்டிகளை விளையாடியிருக்கின்றன.
IPL 2025: பிளே ஆப் போகப்போவது யார் யார்?
இன்னும் 24 லீக் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் நான்கு அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகவில்லை. குஜராத்,டெல்லி, ஆர்சிபி, மும்பை, பஞ்சாப், லக்னோ ஆகிய 6 அணிகள் தான் தற்போதைக்கு பிளே ஆப் ரேஸில் முன்னணியில் இருக்கின்றன.
நடப்பு சாம்பியன் கேகேஆர், கடந்த முறை 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் வருவதற்கு அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இது பொருந்தும் என்றாலும் இந்த அணிகள் அனைத்து போட்டிகளையும் வென்றாலும் ஒரு மேஜிக் நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.
Chennai Super Kings: மேஜிக்கல் வீரர்கள் வேண்டும்
இந்நிலையில், சிஎஸ்கேவை பொறுத்தவரை பலமான வீரர்களை வைத்திருந்தாலும் காம்பினேஷனில்தான் பெரிய சிக்கல் இருக்கிறது. தோனி அடுத்த 5 போட்டிகளையுமே வந்தால் மலை, போனால்… என்ற ரீதியில்தான் விளையாடப்போகிறார் என்பது உறுதி. அப்படியிருக்க, முன்னே சொன்னதுபோல் மேஜிக் நிகழவேண்டுமானால் காம்பினேஷனில் மேஜிக்கல் வீரர்களை எடுத்தாக வேண்டும்.
Chennai Super Kings: ஹூடா, பதிரானா வேண்டாம்
அந்த வகையில், ஏப். 30ஆம் தேதி சேப்பாக்கில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலேயே சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் காம்பினேஷனில் இந்த சில மாற்றங்களை நீங்கள் காணலாம். அதாவது மிடில் ஓவர்களில் ரன்கள் வருவதில் சிரமம் இருப்பதை தோனியும், பிளமிங்கும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த சூழலில், தீபக் ஹூடாவுக்கு (Deepak Hooda) பதில் வரும் போட்டியில் வன்ஷ் பேடி களமிறங்குவார் என 100% கூறலாம். அதேபோல், தனது ஆக்சன் மாற்றத்தால் சிரமப்பட்டு வரும் பதிரானாவுக்கு (Pathirana) பதில் நாதன் எல்லிஸை முயற்சித்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.
Chennai Super Kings: வன்ஷ் பேடி, எல்லிஸ் ஏன் வேண்டும்?
வலைப்பயிற்சியில் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வீரராக வன்ஷ் பேடி (Vansh Bedi) திகழ்கிறார். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், அன்ஷூல் கம்போஜ் என சிஎஸ்கே களமிறக்கும் அத்தனை இளம் வீரர்களும் ஜொலிக்கும் நிலையில் வன்ஷ் பேடியும் அதேபோல் ஜொலிப்பார் என நம்பலாம். நாதன் எல்லிஸ் (Nathan Ellis) சர்வதேச போட்டிகளிலும் சரி, BBL தொடரிலும் சரி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். முதல் போட்டிக்கு பின் பதிரானாவுக்காக அவரை சிஎஸ்கே ஓரங்கட்ட நேர்ந்தது.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு மேஜிக் நிகழ வேண்டும் என்றால் ஹூடா, பதிரானாவை நீக்கிவிட்டு வன்ஷ் பேடி, எல்லிஸை பிளேயிங் லெவனில் வைக்க வேண்டும். அதேபோல், ஓவர்டனை (Jamie Overton) வைத்துக்கொண்டு சாம் கரனை (Sam Curran) நீக்கினால் போதும்.
Chennai Super Kings: சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, வன்ஷ் பேடி, ரவீந்திர ஜடேஜா, தோனி, ஓவர்டன், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: நாதன் எல்லிஸ்.