சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலிலும் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இவரது கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தோனி மீதான வன்மத்தை அவர் வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக விரேந்தர் சேவாக் ஊடகம் ஒன்றில் பேசுகையில் இப்படியான கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்கும் நிலையில், இந்த ஆண்டு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தால், அதன் மூலம் இத்தனை ஆண்டு ஆதிக்கம் செலுத்திய ஒரு அணியின் சகாப்தம் முவிவுக்கு வருகிறாதா என எடுத்துக்கொள்ளலாமா? என சேவாக்கிடம் கேட்டபோது, அவர் வெடித்து சிரித்தார். உங்கள் வாயில் நெய்யும் சர்க்கரையும்தான் போட வேண்டும் என்றார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய சேவாக், டெல்லி, பஞ்சாப் அல்லது பெங்களூரு அணி கோப்பை வென்றாலும் நெய்யும் சர்க்கரையும் வாயில் போடலாம். சிஎஸ்கே அணி கடைசி இடத்தில்தான் முடிக்கும் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. ஆனால் அப்படி நடந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் கடைசி இடத்தில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணர்வார்கள்.
சென்னை அணியில் புதிய அணுகுமுறை இல்லை. எந்த வீரரை மாற்ற வேண்டும் என்பதை பற்றி அவர்கள் ஆலோசிக்க வேண்டும். எந்த வீரர்களை விளையாட வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். இதுவரை செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டது. இன்னும் சில போட்டிகள் உள்ளன. அதை வைத்து அவர்கள் எந்த வீரர்களை எல்லாம் அடுத்த ஆண்டு தக்க வைக்க வேண்டும் என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டும். யார் வெளியேற்ற வேண்டும்? யாரை புதிதாக அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என பேசி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதெல்லாம் மோசமாக விளையாடுகிறதோ அப்போதெல்லாம் சேவாக் கடுமையாக விமர்சிப்பார். அதேபோல் இப்போதும் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனம் எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தும் அதேபோல் இப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிங்க: CSK பிளே ஆப் போக ‘மேஜிக்’ நடக்கணும்… அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 க்கு பிறகு இந்த 5 வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!
‘