“ரேஷன் கடைகளில் எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது கலப்படம்?” – சீமான் சரமாரி கேள்வி

சென்னை: “ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் என்ற பெயரில் உண்ணவே முடியாத அளவுக்கு தரமற்ற கலப்பட அரிசி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பொங்கல் தொகுப்பில் பல்லி விழுந்த புளி, உருகிய வெல்லம், உடைந்த கரும்பு என தரமற்ற பொருட்களை வழங்கியது.

இதையடுத்து, தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில், தமிழக அரசின் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த துவரம் பருப்பில், பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளாக இந்தக் கலப்படம் நடைபெற்று வருகிறது? திராவிடமே கலப்படம் எனும்போது திராவிட ஆட்சியில் அனைத்து துறையிலும் கலப்படம் இருப்பதில் வியக்க ஒன்றுமில்லை.

ஆனால், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருள் வழங்குவதாக மார்தட்டும் திமுக, கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடுகின்ற முறைகேடுகளை உடனடியாக களைய வேண்டும். ரேஷன் கடைகள் நியாயமாக செயல்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்,” என்று சீமான் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.