பீஜிங்: ‘பஹல்காம் தாக்குதல் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “பஹல்காம் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது.
இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளுமா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், ‘பஹல்காம் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு: – சீனா பதற்றத்தை தணிக்க வேண்டியுள்ள நிலையில், அமெரிக்காவோ தகுந்த பதிலடிக்கு வலியுறுத்தியுள்ளது. “இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்” என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் பஹல்காம் தாக்குதலை கண்டித்திருந்தனர். மேலும், இந்தியாவுக்கு தங்களது ஆதரவை வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீவிரவாதத்தை அழிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் தடையாக இருக்காது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.
“காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்” என்று அவர் கூறியிருந்தார்.