அமராவதி,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுவரை கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. வேட்பாளராக வெங்கட சத்யநாராயணா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சொந்த காரணங்களுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.