மாஸ்கோ: உக்ரைன் உடன் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்” மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் அதிபர் புதின் மே 8 முதல் 10 வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதனை உக்ரைனும் பின்பற்ற வேண்டும். ஆனால், இதனை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷ்யா அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்” உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் நான் மகிழ்ச்சியடையவில்லை. அது அவசியமில்லை. மிகவும் மோசமான நேரம். விளாடிமிர் , நிறுத்து! வாரத்துக்கு 5,000 வீரர்கள் உயிரிழக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
வெற்றி தினம்: இந்த நிலையில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் மே 9 வெற்றி தினத்தையொட்டி புதின் இந்த போர்நிறுத்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். இதற்கு, பல்வேறு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.