19 ஆண்டுகளாக ஆந்திராவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்: நாட்டை விட்டு வெளியேற போலீஸார் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த மகபூப் பீரான், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்டு, 2 மகன்கள் மற்றும் 2 மகளுக்கு தந்தையானார். தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திர மாநிலம், தர்மாவரம் பகுதியில் வசிக்கும் தனது தங்கையின் மகன் ரஃபீக் அகமதுவுக்கு கடந்த 1989-ல் திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை தர்மாவரத்தில் பிறந்தது.

இந்நிலையில் 1998-ல் ஜீனத் 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். அப்போது, பாகிஸ்தானில் வசிக்கும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜீனத் பாகிஸ்தான் சென்றார். அந்த நேரத்தில் கார்கில் போர் தொடங்கியதால் இவர் பாகிஸ்தானிலேயே தங்க நேரிட்டது. இந்த சமயத்தில் ஜீனத் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையின் பெயர் ரம்ஷா ரஃபீக் . அதன் பின்னர், 2005-ம் ஆண்டு ஜீனத் தனது மகள் ரம்ஷா ரஃபீக்கை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பினார். ரம்ஷா ரஃபீக் பாகிஸ்தானில் பிறந்ததால் அவர் அந்நாட்டு பிரஜையானார். தர்மாவரத்துக்கு வந்து கல்வியை தொடர்ந்தாலும், ரம்ஷா இந்திய பிரஜை ஆவதை விரும்பவில்லை. 2018-ல் பாகிஸ்தான் பிரஜையாக இருப்பதை அவர் நீட்டித்துக் கொண்டார். இது 2028 வரை செல்லுபடியாகும். இந்நிலையில், கடந்த 2023-ல் ரம்ஷா இந்திய பிரஜை ஆக விரும்புவதாக இந்திய அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், இதை இந்திய அரசு நிராகரித்தது.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதது. இதைத் தொடர்ந்து, ரம்ஷாவின் விவகாரம் வெளியே வந்துள்ளது. இவரும் 30-ம் தேதிக்குள் வெளியேற வேண்டுமென அங்குள்ள போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். தனது 7 வயதில் இந்தியா வந்து, பெற்றோருடன் வசித்து வந்த ரம்ஷா 19 ஆண்டுகள் வரை ஆந்திராவிலேயே வசித்து வந்ததோடு தற்போது பாகிஸ்தான் செல்ல மாட்டேன் எனவும் அடம்பிடித்து வருகிறார். பாகிஸ்தான பிரஜையாகவே தொடர்ந்து இருந்து வந்ததால், அவரை இங்கு தொடர்ந்து வசிக்க அனுமதிக்க இயலாது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.