CSK தோல்வி உறுதி… பஞ்சாப் அணியின் இந்த 3 வீரர்களை சமாளிக்காவிட்டால்…!

CSK vs PBKS: ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே ஓரளவு தங்களின் முழு ஆற்றலை ஒரு போட்டியிலாவது வெளிப்படுத்தியிருக்கிறது, சிஎஸ்கேவை தவிர… தற்போது புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவுடன் பின்னிலையில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தோல்விகளை தழுவியிருந்தாலும் அந்த அணி பலமான அணியாகவே இருந்திருக்கிறது.

CSK vs PBKS: பலமாகும் ராஜஸ்தான், ஹைதராபாத் 

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அடித்தது. அதில் அபிஷேக் சர்மா 141 (55) ரன்களை அடித்திருந்தார். கடந்த சிஎஸ்கே போட்டியும் அவர்களது பேட்டிங் அணுகுமுறை குறித்த நேர்மறை எண்ணத்தை கொடுத்திருக்கும். அதேபோல், நேற்று (ஏப். 28) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் அடித்திருக்கிறது. குறிப்பாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 38 பந்துகளில் 101 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார். 

CSK vs PBKS: சிஎஸ்கேவுக்கு இந்த 3 வீரர்கள் பிரச்னை

இப்படி மற்ற 9 அணிகளும் இன்னும் பிளே ஆப் ரேஸில் இருந்துகொண்டிருக்க, சிஎஸ்கே மட்டும் இன்னும் பழைய தோற்றத்திலேயே 10வது இடத்தில் படுத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில், சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் அதன் 10வது லீக் போட்டியை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை (ஏப். 30) மோத இருக்கிறது. சிஎஸ்கே எப்படியாவது இந்த போட்டியை வென்றால் மட்டுமே ஓரளவு நம்பிக்கை கிடைக்கும். 

அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கு நாளைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த 3 வீரர்கள்தான் பெரிய பிரச்னையாக இருப்பார்கள். இந்த 3 பேரை சமாளிக்காவிட்டால் சிஎஸ்கேவுக்கு நாளையும் தோல்வி உறுதி எனலாம். 

CSK vs PBKS: பிரியான்ஷ் ஆர்யா

பஞ்சாப் கிங்ஸை முதல் சுற்றிலேயே சிஎஸ்கே சிறப்பாகவே எதிர்கொண்டது. அதில் டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து பஞ்சாப் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்த சூழலில், அஸ்வின், நூர் அகமது என அனைவரையும் அசால்ட்டாக எதிர்கொண்டு 42 பந்துகளில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளை பறக்கவிட்டு 103 ரன்களை குவித்தார் பிரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya). இவர் அன்று அடித்திருக்காவிட்டால் நிச்சயம் சிஎஸ்கே அந்த போட்டியை வென்றிருக்கும். அதேதான் இப்போதும். நாளைய போட்டியில் இவரை தடுக்காவிட்டால் சிஎஸ்கேவால் வெற்றியை நெருங்கவே முடியாது. 

CSK vs PBKS: ஜாஷ் இங்கிலிஸ்

டாப் ஆர்டரில் பிரியான்ஷ் ஆர்யா என்றால் மிடில் ஆர்டரில் இவர். இங்கிலிஸ் (Josh Inglis) நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்ஸிற்கு காத்திருக்கிறார். அது சேப்பாக்கத்தில் கூட அமையலாம். 360 டிகிரியிலும் அடிக்கும் திறன் கொண்டவர் இவரை சிஎஸ்கேவின் மோசமான மிடில் மற்றும் டெத் பௌலிங் எப்படி தாக்குப்பிடிக்கும். ஜாஷ் இங்கிலிஸ் நம்பர் 4இல் இவர் இறங்கினால் சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்னை இருக்கும். இவரை ஆட்டமிழக்க வைக்கவும் சிஎஸ்கே தனி திட்டத்தை வகுக்க வேண்டும். 

CSK vs PBKS: ஹர்பிரீத் பிரார்

இவரை இந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி பெரியளவில் பயன்படுத்தவே இல்லை. கடந்தாண்டு பஞ்சாப் அணி சேப்பாக்கத்தில் வந்து வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் ஹர்பிரீத் பிரார் (Harpreet Brar) தான். 4 ஓவர்களில் 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறிப்பாக தூபேவின் விக்கெட்டை இவர்தான் கைப்பற்றியிருந்தார். அந்த வகையில், கேகேஆர் அணிக்கு எதிரான பஞ்சாப் அணியின் கடைசி போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார்.  அப்படியிருக்க, சிஎஸ்கேவுக்கு எதிராகவும் இவர்தான் வருவார். இவரின் 4 ஓவர்களை சிஎஸ்கே சமாளித்தாக வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.