சென்னை: “இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இந்த நிலை உருவாகவேண்டும் என்றால், காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.
சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கூட்டுப் பொறுப்பு. எனவே, நீங்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சின்ன சின்ன அலட்சியங்கள்கூட தவிர்த்து, சுய ஒழுக்கத்தோடு எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்த பிறகு, உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் அதேவேளையில், ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து தடுக்கும் முன்னெச்சரிக்கையும் நமக்குத் தேவை.
உங்கள் சுற்றுப்புறங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் ஏதாவது தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள்.
செப். 6-ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும். இந்நாளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.
தமிழ்நாடு என்பது, குற்றங்கள் நடக்காத மாநிலம். போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம். பாலியல் குற்றம் இல்லாத மாநிலம், என்ற நிலையை நாம் எட்டவேண்டும். எங்கும் யாராலும் குற்றம் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்படவேண்டும். மனித வளர்ச்சியின் எல்லா குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான் நமக்கு பெருமை. எனவே, இதில் பூஜ்ஜியம் வாங்குவதற்கு, ஒவ்வொரு காவலரும் 100 விழுக்காடு அர்ப்பணிப்போடு பணியாற்றவேண்டும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான ஐந்தாவது காவல் ஆணையம் 934 பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. அதில் 86 பரிந்துரைகள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. மேலும் 274 பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, மற்றவை அரசின் பரிசீலனையில் உள்ளன.
பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையிலே தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை பட்டியலானது சமூகநீதி அடிப்படையிலே இருந்து வந்த நிலையிலே கடந்த 2019-ம் ஆண்டு வரப்பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்.
இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிப்படுத்தும் அடையாளமாக “காலனி” என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாக மாறியிருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசிய அத்தனை விவகாரங்களிலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இனியும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த அரசை பொறுத்தவரைக்கும் எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியை விட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம். இந்த உறுதியோடும், மக்கள் மேல் உள்ள நம்பிக்கையோடும் சொல்கிறேன், அடமானம் வைக்க நினைப்பவர்களாலும், அபகரிக்க நினைப்பவர்களாலும் தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது. சட்டமன்றத்தின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். அடுத்தப்படியாக மாநில சுயாட்சி கனவையும் நிறைவேற்ற குழு அமைத்திருக்கிறோம்.
நான் தொடங்கியுள்ள இந்த பயணம் நீண்டது. முதல்வராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன், தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.