நானி நடித்திருக்கும் ‘ஹிட்: தி தேர்டு கேஸ்’ (HIT: The Third Case) திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
‘ஹிட்’ திரைப்பட யுனிவர்ஸின் மூன்றாவது பாகமாக இது உருவாகியுள்ளது.
இதில் நானியுடன், நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக, படக்குழுவினர் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி ஆகியப் பகுதிகளுக்கு சுற்றி வருகின்றனர்.
இது போன்ற புரொமோஷன் நேர்காணல்களில் நானியும் ஶ்ரீநிதி ஷெட்டியும் தொடர்ந்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி ஒரு நேர்காணலில், “அவெஞ்சர்ஸ் படத்தை இங்கு எடுத்தால், எந்தெந்த நடிகர்களை தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்வி நானியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் போது, ஶ்ரீநிதி ஷெட்டி ‘அவெஞ்சர்ஸ்’ கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட, நானி அவற்றுக்குப் பொருத்தமான தென்னிந்திய நடிகர்களை தேர்ந்தெடுத்து பதிலளித்தார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானி பேசுகையில், “எனக்கு, ஹல்க் என்றால் பிரபாஸ் அண்ணா, தார் என்றால் ராம் சரண், ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார், ப்ளாக் பாந்தர் என்றால் அல்லு அர்ஜூன், ஆன்ட் மேன் என்றால் துல்கர் சல்மான்.
மேலும், நான்தான் ஐயர்ன் மேன்!” என்று சிரித்தபடி பேசினார்.