'ரொம்ப லக்கி' சூர்யவன்ஷி குறித்த கில் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – பின்னணி என்ன?

IPL 2025 Latest News Updates: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நேற்று (ஏப். 28) மிக முக்கியமான நாள் எனலாம். ஏன், உலக கிரிக்கெட்டிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நிகழ்வு எனலாம். ஆம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தது அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுதான். 

IPL 2025: குஜராத்தை குதறி எடுத்த சூர்யவன்ஷி

குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 210 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். வெறும் 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு சூர்யவன்ஷியின் அந்த அதிரடி ஆட்டமே காரணம். 

முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா, கரீம் ஜனத் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்திருந்தார். அதிலும் இஷாந்த் சர்மாவின் ஒரு ஓவரில் 28 ரன்களையும், கரீம் ஜனத்தின் ஓவரில் 30 ரன்களை அடித்து சூர்யவன்ஷி தனது பெயரை நிலைநிறுத்திவிட்டார் எனலாம்.

IPL 2025: கில் என்ன சொன்னார்?

சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம் ஜெய்ஸ்வாலின் அதிரடியை கூட மறைத்துவிட்டது எனலாம். அதேபோல், குஜராத் அணியிலும் முதல் இன்னிங்ஸில் 84(50), பட்லர் 50 (26) ஆகியோரின் ஆட்டத்தையும் மறக்கடிக்க  வைத்துவிட்டது. சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம் என நம்பிக்கையுடன், சிறு காயம் காரணமாக இரண்டாம் பாதியில் களமிறங்காமல் இம்பாக்ட் வீரராக வெளியேறிருந்தார். 

ரஷித் கான் களத்தில் கேப்டனாக செயல்பட்ட நிலையில், குஜராத் படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பின் சுப்மான் கில் அணியின் சார்பாக பேசியிருந்தார். அப்போது வைபவ் சூர்யவன்ஷி குறித்த கேள்விக்கு பதிலளித்த கில் அவர்,”அது அவருடைய நாள் (அதிர்ஷ்ட நாள்). அவருடைய பேட்டிங் அபாரமாக இருந்தது, அவர் தனது நாளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்” என்றார். சுப்மான் கில்லின் இந்த பேச்சுதான் தற்போது சிறு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

IPL 2025: மறைமுகமாக சாடிய அஜய் ஜடேஜா

சுப்மான் கில்லை குறிப்பிடாமல் ஜியோஸ்டார் தளத்தில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா,”ஆனால் ஒரு 14 வயது சிறுவன் தன்னை நம்ப வேண்டும், தன்னை நம்பும் அதே நேரத்தில், அதை இந்தளவு பெரிய போட்டியில் எடுத்துச் செல்வது (சாதாரணமானது இல்லை). அதேநேரத்தில் ஒரு நாள் தொலைக்காட்சியில் யாரோ ஒருவர் (கில்) சொல்வது போல, ‘இது அவனுடைய அதிர்ஷ்டமான நாள் தானே’ என்று பேசுவார்.

ஆனால், பல இளம் கிரிக்கெட் வீரர்கள் அரிதாகவே நனவாக்கும் கனவை சூர்யவன்ஷி இன்று நனவாக்கி உள்ளார். அவரது இன்னிங்ஸை இப்போது கிரிக்கெட் ஆய்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்” என்றார்.

IPL 2025: கில்லுக்கு போட்டி மனப்பான்மையா?

அதாவது, கில் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறன் குறித்து பெரிதாக பேசாமல், ஏதோ அதிர்ஷ்டத்தால் அடித்துவிட்டதாக பேசுவது தவறு என்ற தொனியில் அஜய் ஜடேஜா பேசியிருக்கிறார். சூர்யவன்ஷியை அடுத்து 2026இல் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என பேச்சும் எழுந்திருக்கிறது. சுப்மான் கில்லும் இந்த ரேஸில் இருக்கும் நிலையில், அந்த போட்டி மனப்பான்மையில் கூட கில் பெரிதாக பேசாமல் விட்டிருக்கலாம் என நெட்டிசன்களில் சிலரும் விமர்சிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.