வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்காட் பெசென்ட், “எங்கள் ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்தார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பேசினார். கொரிய குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்ததாக நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், ஜப்பானுடன் நாங்கள் கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.
பல நாடுகள் சில நல்ல திட்டங்களை முன்வைத்துள்ளன. அவற்றை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் கையெழுத்திடும் முதல் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
சீன விவகாரத்தைப் பொருத்தவரை, அந்த நாடுதான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இது அவர்களின் பொறுப்பாகும். ஏனென்றால் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா விதிக்கும் வரி என்பது, அவர்களின் பொருட்களுக்கு நாங்கள் விதிக்கும் இறக்குமதி வரியைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்போது, சீன பொருட்களுக்கு அமெரிக்காக 145% வரியை விதிக்கிறது. பதிலுக்கு சீனா, 120% வரியை விதிக்கிறது. ஆனால், இத்தகைய வரி வகிதங்கள் நீடிக்க முடியாதவை.” என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் சீனா உட்பட பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை முழுமையாக அறிவித்தார். பின்னர், ஏப்ரல் 9 ஆம் தேதி, சீனா மற்றும் ஹாங்காங் தவிர, இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வரை இந்த வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், சுமார் 75 நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களுக்காக அமெரிக்காவை அணுகியதை அடுதது இந்த அறிவிப்பு வெளியானது. எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் மீதான 25% வரிகளைத் தவிர மற்றவற்றுக்கான அடிப்படை வரி 10% நடைமுறையில் உள்ளது.