புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸைத் தாக்க முயன்ற பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில் தோல்வி அடைந்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது வெளிப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அது இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 4 வலைதளங்களை ஹேக் செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. ‘IOK ஹேக்கர்’ – கிலாஃபாவின் இணையம் என்ற புனைப்பெயரின் கீழ் செயல்படும் இந்தக் குழு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இணைய பக்கங்களை சிதைக்கவும், ஆன்லைன் சேவைகளை சீர்குலைக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறவும் முயன்றுள்ளது. இந்தியாவின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, ஊடுருவல்களை அதேநேரத்தில் கண்டறிந்து, அது குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளி (APS), ராணிக்கேத் பகுதியில் உள்ள ராணுவ பொதுப்பள்ளி ஆகிய இரண்டு வலைதளங்களும் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டும் பரவலான சேவை மறுப்புத் தாக்குதலை எதிர்கொண்டது. இதேபோல், ராணுவ நல வீட்டுவசதி அமைப்பின் (AWHO) தரவுத்தளத்திலும், இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அமைப்பின் தரவுத்தளத்திலும் ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு தளங்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டன, மேலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில், 4 நெட்வொர்க்குகளும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இந்திய ராணுவம் தனது டிஜிட்டல் தளத்தை பாதுகாப்பதிலும், அதன் சைபர் நிலையை தொடர்ந்து மேம்படுத்துவதிலும், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதிலும் உறுதியாக உள்ளன.