விழுப்புரம்: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதால் ரூ.12,500 சம்பளம் வழங்கப்படுகிறது.
மே மாதம் சம்பளம் 2012-ம் ஆண்டு இந்த வேலைக்கு சேர்ந்தது முதல் இருந்து வழங்கப்படவில்லை. மேலும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அரசு சலுகைகளும் இதுவரை கிடையாது.13 ஆண்டுகள் கடந்து தற்போது 14-வது ஆண்டிலும் இன்னும் தொகுப்பூதியத்தில் உள்ளதை இனிமேலாவது காலமுறை சம்பளத்திற்கு மாற்றினால் தான் அரசு சலுகைகள், பணி பாதுகாப்பு கிடைக்கும்.
சட்டசபையில் அனைத்து கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியில் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்போனது. .
இந்நிலையில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சங்கத்தில் மாநிலத்தலைவர் ப.கீதா இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எவ்வித அறிவிப்புமின்றி 12.000 குடும்பங்கள் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டது.
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்து விட்டு வாக்குறுதியை (181)ஐ நிறைவேற்றாததால் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. விடியல் ஆட்சியில் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்.” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.