மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் செயல்படுகிறது. இது தவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் இப்பள்ளியை நடத்துகிறார். மதுரை கேகேநகர், அண்ணாநகர், பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் சிறப்புக் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர்.
இப்பள்ளியில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4 வயது மகள் ஆரூத்ரா படித்தார். வழக்கம் போல இன்று (ஏப்.29) காலை, ஆரூத்ரா பள்ளிக்கு அழைத்து வந்து விடப்பட்டார். காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் விளையாடிய ஆருத்ராவை திடீரென காணவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் ஆருத்ரா, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரரகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். கார் ஓட்டுநர் ஒருவர் உள்ளே சென்று சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த குழந்தையை மீட்டார். பின்னர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதன்பின் குழந்தையின் உடல் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை அவசர, அவசரமாக வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, கோட்டாட்சியர் ஷாலினி, காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் பள்ளிக்கல்வி, வருவாய்துறை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் குழந்தை விழுந்து இறந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். 8 அடி ஆழமுள்ள தொட்டியில் ஒரு அடி உயரத்துக்கு தடுப்புச் சுவர் இருந்தாலும் தொட்டி இன்று மூடப்படாமல் இருந்துள்ளது. பள்ளியில் இருந்த பணியாளர்களும், ஆசிரியைகளும் குழந்தை தொட்டி பகுதிக்கு சென்றதை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் சில விதிமுறை மீறல்கள் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா, ஆசிரியைகள், ஊழியர்கள் என, 7 பேரிடம் அண்ணாநகர் போலீஸார் விசாரிக்கின்றனர். மதுரையில் இசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தையின் தந்தை கூறுகையில், “வழக்கம் போல் எனது குழந்தை இன்று பள்ளிக்கூடம் வந்தது. பள்ளி வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக கூறுகின்றனர். எப்படி விழுந்தாள் என்பதெல்லாம் தெரியாது. இறந்த பிறகே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனது அழகு மகள் போய்விட்டாள். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்கவேண்டாம்” என கண்ணீருடன் கூறினார்.
கேகே.நகர் தினேஷ் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளி செயல்படுகிறது. 4 மாதத்திற்கு முன்பு எனது பேரன், பேத்தியை சேர்த்துள்ளோம். காலை 11 மணிக்கு திடீரென பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. பள்ளியில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. தங்கள் குழந்தைகளை வந்து அழைத்துச் செல்லுங்கள் என தெரிவித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறுகின்றனர். இது துரதிரஷ்டவசமானது. பள்ளி வளாகத்திற்குள் இருந்த தண்ணீர் தொட்டி மூடாமல், கைப்பிடி சுவர் உயரமின்றி இருந்ததால் விழுந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனாலும், என்ன நடந்தது? என்பது விசாரணையில் தெரியும்” என்றார்.